தேவன் நம்முடைய வாழ்விலோ அல்லது ஊழியத்திலோ ஒரு காரியத்தை எப்படி செய்கிறார். முதலாவது அந்த காரியத்தை குறித்து நம்மோடு கூட தரிசனங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் மூலம் பேசுகிறார். அந்த தரிசனத்தை நம்முடைய வாழ்விலே நிறைவேற்றி அவர் சர்வ வல்லவர் என்பதை நம்முடைய வாழ்க்கையில் நமக்கு உணர்த்துகிறார். ஆதியாகமம் 17:1 ல் ஆபிரகாமோடு தேவன் இவ்வாறு இடைப்பட்டு நான் சர்வ வல்லமையுள்ள தேவன் என்று கூறி நீ உத்தமனாய் இரு என்று கூறுகிறதையும், ஆபிரகாமுக்கு ஆண்டவர் தரிசனங்களை கொடுத்து அவருடைய வாழ்விலே பெரிய பெரிய காரியங்களைச் செய்தும் இன்றைக்கும் அந்த வாக்கு தத்தங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கிறதையும், அவர் சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதையும் நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.
(i)தரிசனம் கொடுத்தல்
சகரியா 4: 2,3 இல் கர்த்தர் தரிசனத்தை கொடுத்து அதன் அர்த்தத்தையும் இங்கே கூறுகிறார்.
நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.
அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.
அர்த்தம்
குத்துவிளக்கு சபை வெளி 1:20 கிண்ணம் மற்றும் விளக்குகளுடன் கூடிய விளக்குத்தண்டு, கடவுளுடைய ஆவியின் தொடர்ச்சியான விநியோகத்தையும் கடவுளுடைய பிரசன்னத்தின் ஒளியையும் குறிக்கிறது. அதே நேரத்தில் ஏழு விளக்குகள் கடவுளுடைய ஆவியின் முழுமையை அடையாளப்படுத்தலாம்.
இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு அபிஷேகம் செய்யப்பட்டவர்களை, அநேகமாக செருபாபேல் (ஆளுநர்) மற்றும் யோசுவா (பிரதான ஆசாரியர்) ஆகியோரைக் குறிக்கின்றன என்று தேவதூதர் விளக்குகிறார். அவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களாக இருக்கலாம். (சகரியா 4:11-14)
(ii) தரிசனம் நிறைவேறுதல்
செருபாபேல் என்பவர் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு யூதர்களின் முதல் குழுவைத் திரும்ப வழிநடத்திய ஒரு தலைவராக இருந்தார். அவர் யூதாவின் ஆளுநராகவும், இரண்டாவது ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஒரு தலைவராகவும் இருந்தார்.
சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்குத் திரும்பும்போது, தேவனுடைய மகிமை அவருடைய மக்களிடையே தங்கியிருந்த இடமாக ஆலயத்தை மீண்டும் கட்டுவதும் இதன் பின்னணியில் இருந்தது. அவர்கள் சவால்களுக்குப் பிறகு சவால்களையும், பின்னடைவுகளுக்குப் பிறகு பின்னடைவுகளையும், வழியில் ஊக்கமின்மையையும் எதிர்கொண்டனர், அந்த நாட்களில் அவர்கள், "நான் தொடர முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இது எப்போதாவது நடக்குமா? இதை எப்படிச் செய்யப் போகிறோம்?" என்று அவர்கள் நினைக்கும் நாட்களில், எஸ்றா 5 : 2 ல் சொல்லப்பட்டிருக்கிறது போல "அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்".
சகரியா 4:6 இல் கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்கு உண்டாயிற்று. "அவர் என்னை நோக்கி: இது செருபாபேலுக்குச் சொல்லப்படும் கர்த்தருடைய வார்த்தை. பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்". ஆலயத்தில் தொடர்ந்து வேலை செய்ய இந்தப் வார்த்தை செருபாபேலை ஊக்குவிக்கிறது.
இந்த வார்த்தையானது நாம் செயல்படாமல் இருக்க வேண்டும் என்று சொல்லாமல், எந்த செயலாக இருந்தாலும் மனித பெலத்தினாலும், மனித பராக்கிரமத்தினாலும் ஆகாது. எந்த செயலைச் செய்தாலும் அதை தேவனுடைய ஆலோசனையின்படி செய்யவேண்டும் என்று தேவன் சொல்லுகிறார்.
தேவன் தமது செயல்களை நமது மூலமாகவே வெளிப்படுத்த விரும்புகிறார். இன்றும் சிலர் என்ன சொல்லுகிறார்கள் என்றால், "எல்லாவற்றையும் தேவனே செய்கிறார். நாம் எதுவும் செய்ய வேண்டாம்" என்று தவறாக இந்த வசனத்தை புரிந்து கொள்கிறார்கள். அப்படி அல்ல. செயல்படாத மனிதனை தேவன் செயல்படுத்த மாட்டார். செயல் பட விரும்புகிறவர்களை பலப்படுத்தி செயல்பட வைக்கிறார்.
அக்காலத்திலே செருபாபேல் என்ற தேவ மனிதன் தேவனுடைய ஆலயத்தை கட்டும்படியாக பாரத்துடன் செயல்பட ஆரம்பிக்கிற வேளையில்தான் தேவனுடைய வார்த்தை செருபாபேலுக்கு வருகிறது. உன்னுடைய முயற்சி சரியானது. உன்னுடைய செயல் மிகவும் நல்லது, நீதான் செயல்பட போகிறாய். ஆனால் முழுவதும் உன்னுடைய பலமும் பராக்கிரமமும் அல்ல என்னுடைய ஆலோசனையின்படி, என்னுடைய ஆவியினாலே (பலத்தினாலே) செய்யும் போது அது எந்த தடையும் இல்லாமல் நடக்கும். அப்படி தடைகளே வந்தாலும் அவைகள் ஒன்றுமில்லாமல் போகும் என்றே பேசுகிறார். கர்த்தர் தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மனிதனுடைய பலம் மட்டுமே போதாது, ஏன் என்றால் மனித பலம் எல்லாம் தனக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே செயல்படும். சூழ்நிலைகள் எதிராக வந்தாலோ, பலவீனமாக மாறிவிடும். மேலும் மனித பலத்தினாலும், வல்லமையினாலும் மட்டும் துவங்குகிற எந்த செயலும் முழுமை அடையாமல் பாதியில் நின்று போகக் கூடிய சூழ்நிலை உருவாகலாம். மனிதனின் பராக்கிரமத்தினால் வேகமாக துவங்குகிறவைகள், சோர்வு வந்ததும் நின்று போக அதிகமான வாய்ப்புக்கள் ஏற்படலாம்.
ஆகையால் தான் வைராக்கியமாக தேவனுடைய பணியை துவங்கிய செருபாபேலிடம் கர்த்தர் சொல்லுகிறார். உன்னுடைய பலமும், பராக்கிரமமும் மட்டும் போதாது. என்னுடைய ஆவியும் உன் பலத்துடனும், பராக்கிரமத்துடனும் இணைய வேண்டும். என்னுடைய ஆவியினால் நீ நிரப்பப்படும் போதுதான் நீ முழுபலத்துடன் முழுமையாக எந்த செயலையும் செய்து முடிக்க முடியும் என்று "என்னுடைய ஆவியினாலேயே எல்லாம் ஆகும்" என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தருடைய இந்த வார்த்தை செருபாபேலுக்கு மட்டுமல்ல, விசுவாசிகளாக இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமாகும். தேவனுடைய ஒத்தாசை இல்லாமல் விசுவாச மக்கள் எந்த செயலையும் தன்னிச்சையாக செய்யக் கூடாது.
தன்னிச்சையாக செய்யப்படும் எந்த செயலும் அது தேவனுக்கு மகிமையைக் கொண்டு செல்லாது, நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றும் தேவனுக்கு மகிமையைக் கொண்டு செல்ல வேண்டும். தேவனுக்கு மகிமையைக் கொண்டு செல்ல வேண்டுமானால் நம்முடைய செயல்களில் தேவனுடைய ஆலோசனைகளும், தேவனுடைய விருப்பம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும், தேவனுடைய விருப்பத்தின் படியான வாழ்வும் அவசியம். தேவன் எந்த இடத்திலும் நம்மை பலவீனராக விடுவதும் இல்லை. அல்லது நம்முடைய பலவீனத்தில் நம்மைக் கைவிடுகிறவரும் இல்லை. நம்மை பலப்படுத்தவும், நம் மூலமாக செயல் படவும் நமக்கு வெற்றியை கொடுக்கவுமே தேவன் விரும்புகிறார்.
(III) சர்வ வல்லவருடைய வல்லமை அறிந்து கொள்ளுதல்.
ஆசா: ஒரு சமயம் எத்தியோப்பியனாகிய சேரா என்பவன் யூதாவிற்கு விரோதமாக யுத்தத்திற்கு பலத்த தன்னுடைய படையுடன் வருகிறான். (2 நாளாகமம் 14:9,10) அந்த வேளையில் குறைவான தனது படையுடன் யுத்தம் செய்வதற்காக களத்தில் இறங்கி விட்ட ஆசா, தேவனை நோக்கி ஜெபித்த ஜெபம் அவர் தேவனை எந்த அளவிற்கு நம்பினார், சார்ந்து கொண்டார், என்பதற்கு சான்றாக இருக்கும்.
"ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ள விடாதேயும் என்றான்" (2 நாளாகமம் 14:11).
ஆசாவின் ஜெபத்தைக் கேட்டு தேவன் தமது வல்லமையை ஆசாவிற்கும் அவனுடைய படைக்கும் கொடுத்தபடியினால் சரித்திரத்தை மாற்றக் கூடிய செயல் நடக்கிறது. உலக வழக்கம் என்ன? என்றால் பலசாலி ஜெயிப்பான். பராக்கிரம சாலி ஜெயிப்பான். இப்படித்தான் சிறு குழந்தை கூட கண்ணை மூடிக்கொண்டு சொல்லும். ஆனால் இங்கு நடந்தது என்ன? பலசாலியாக, பராக்கிரம சாலியாக வந்த எத்தியோப்பியனாகிய சேராவும், அவனுடைய படைகளும், பலவீனமான ஆசாவின் படைகளுக்கு முன்பாக நிற்க முடியாமல் ஓடுகிறது. அதைக்குறித்து வேதத்தில் பார்க்கும் போது. "அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும்முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஒடிப்போனார்கள்".
தாவீது: பலசாலியான கோலியாத்தை வீழ்த்த பலவீனமான தாவீதையே தேவன் பயன்படுத்தினார். தேவனுக்கு முன் பலமா? பலவீனமா என்பது முக்கியமல்ல. தேவனுடைய கரங்களில் பயன்படுகிறவர்களா? என்பதே முக்கியம்.
கோலியாத்திற்கு முன்பாக தாவீது நிற்கும் போது தன்னுடைய பலவீனத்தை நினைக்கவில்லை. தனக்குள் இருக்கும் தேவ பலத்தையே சார்ந்திருந்தார். மனித பலம் எல்லாம் காய்ச்சல் வந்தால் காணமால் போய் விடும். தேவ பலம் அப்படி அல்ல. தேவனுடைய வல்லமையால் (பலத்தால்) நிறைந்தவர்களாக இருந்தால் எதைக்குறித்தும் நாம் பயந்து நடுங்க வேண்டிய அவசியம் இருக்காது.
சிம்சோன் : கொலோசியர் 1:29 அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
சிம்சோன் மிகவும் பலம் வாய்ந்தவன். பெலிஸ்திய சேனைகள் நடுங்கும்படியாக செய்தவன். பெலிஸ்தியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவன். காரணம் கர்த்தருடைய ஆவி அவருக்கு சில சமயங்களில் வந்தது, அவருக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட பலத்தை அளித்தது. நியாயாதிபதிகள் 13ம் அதிகாரம் கடைசி வசனங்களிலிருந்து 16ம் அதிகாரம் வரை வாசிக்கும்போது கர்த்தருடைய ஆவியானவரை பற்றி எழுதியிருப்பதை வாசித்து அறிந்து கொள்ளலாம். அவர் சிம்சோனை ஏவினார். அவன் மேல் பலமாய் இறங்கினார். அவன் மேல் இறங்கினார் என்று பார்க்கமுடிகிறது.
1)முதலில் கர்த்தருடைய ஆவியானவர் சிம்சோனை ஏவினார். அதனிமித்தம் இஸ்ரவேலை ஆண்டுகொண்டிருந்த பெலிஸ்தியரிடத்திற்கு கொண்டுபோகப்பட்டான்.
2)இரண்டாவதாக கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் பலமாய் இறங்கினார். அதனிமித்தமாக எதிராக வந்த கெர்ச்சிக்கிற பால சிங்கத்தை ஒரு ஆட்டுக்குட்டியை கிழித்துப்போடுவது போல கிழித்துப்போட்டான்.
3)மூன்றாவதாக கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் இறங்கினபோது, முப்பது பேரை ஒரு தனி மனுஷனாக நின்று அவர்களை கொன்று அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டு வந்தான்.
4) நான்காவதாக கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் பலமாய் இறங்கினபோது கழுதையின் பச்சை தாடை எலும்பை எடுத்து தனி ஒரு மனிதனாக நின்று 1000 பேரை கொன்று குவித்தான்.
கிதியோன் : அந்த 300 பேரும் போரில் வெற்றி பெறுகிறார்கள்! எதிரிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், அவர்கள் தங்கள் பக்கம் கர்த்தரின் பலத்தை வெளிப்படுத்துகிறார்கள். "அன்று ராத்திரி கர்த்தர் அவனை நோக்கி: நீ எழுந்து, அந்தச் சேனையினிடத்திற்குப் போ; அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.."என்றார். நியாயாதிபதிகள் 7:9.
தேர்ந்தெடுக்கப்பட்ட 300 பேரும் பொறுமையாகவும் தைரியமாகவும் தங்கள் "கைகளை" தண்ணீர் குடிக்கப் பயன்படுத்தினர். (நியாயாதிபதிகள் 7:6) இப்போது கர்த்தர் எதிரியை அவர்களின் "கைகளில்" ஒப்படைக்கிறார். கர்த்தர் அவர்களின் கைகளை, உண்மை மற்றும் அடையாளமாக மதிக்கிறார். 11 ஆம் வசனத்தில் கர்த்தர் "பின்பு சேனையிடத்திற்குப் போக, உன் கைகள் திடப்படும் என்றார்;" என்று கூறுகிறார்.
Write a public review