வாலிப பருவத்தில் ஜெயங் கொள்ளுதலும், வாலிப பருவத்தில் கேள்விகளும்.
மனித வாழ்வில் அனேக பருவங்கள் உள்ளன. அதில் வாலிப பருவம் மிகவும் முக்கியமானதாகும் . இந்த பருவம் சவால் நிறைந்த ஒரு பருவம், இரட்சகர் இயேசுவை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். அதே நேரத்தில் உலகத்திற்கும், அதன் மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.
வாலிபத்தில்
வரும் கேள்விகள்:
1. நான்
பரிசுத்தமாக வாழ முடியுமா?
2. வாலிபத்திலே
இயேசுவை ஏற்பது நல்லதா?
3. இயேசுவை ஏற்று கொண்டால் வாலிபத்தின் சந்தோஷத்தை இழப்பேனோ?
வாலிப பருவத்தில் இயேசுவை ஏற்று கொண்டு பரிசுத்தத்தைக் காத்துக்கொண்டு சந்தோசமாக வாழ முடியும். (சங்கீதம் 119:9 - 16) ஆண்டவருடைய வசனத்தினாலே தான் வாலிபன் பரிசுத்தமாக வாழ முடியும். முழு இருதயத்தோடும், ஆசையோடும் ஆவலாக அவரை தேடவேண்டும். வாலிபர்கள் ஒரு விஷியத்தை ஆர்வமாக, ஆசையாக செய்தால் நன்றாக செய்வார்கள், அதையே வற்புறுத்தி செய்ய சொன்னால் சரியாக செய்யமாட்டார்கள். ஆசையோடு வேதத்தை படித்தால் புரியாதது எல்லாம் புரியும். வேத வசனத்தை வாசித்து அதை இருதயத்திலே காத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் பாவத்திலிருந்து தப்பிக்க முடியும்.
உம்முடைய பிரமாணங்களை போதியும், வேதத்தை யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்டவரிடம் ஜெபித்து தெரிந்து கொள்ள வேண்டும். வேதத்தை புரிந்து வாசித்தால் அவ்வளவு நன்றாக இருக்கும்.
ஆண்டவர் போதித்த வசனத்தை தாவீது மற்றவர்களுக்கு சொல்லியிருக்கிறார். திரளான செல்வத்தில் களிகூறுவது போல வசனத்தில் மகிழ்ச்சியாயிருக்கிறார். கட்டளைகளை தியானித்து அதை தனக்கென்று எடுத்து அதற்கு கீழ்ப்படிகிறார். அவருடைய வார்த்தையால் மகிழ்ச்சியாய் இருக்கிறார். உமது வசனத்தை மறவேன்.
ஜெயங்கொள்ளுதல்:
"பிதாக்களே ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்" (1யோவான் 2:13).
வாலிபர்கள் பொல்லாங்கனை ஜெயிப்பது ஆண்டவருடைய சித்தம். ஜெயமுள்ள ஒரு வாழ்க்கை வாழ தேவப்பிள்ளைகள் பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டும்.
ஒழுக்கமுள்ள
வாழ்வு:
நாம் ஒழுக்கமுள்ள வாழ்க்கை வாழ ஆண்டவர் விரும்புகிறார். சிறுவயதில் பெற்றோரிடமிருந்து நல்ல விஷியங்களை கற்றுக்கொள்கிறோம். ஆனால் வாலிபனானபின், இப்படியெல்லாம் உங்களுடைய கட்டுப்பாட்டில் வாழமுடியாது என்று எதிர்த்து நிற்கிறார்கள். உலக காரியத்தில் ஒழுக்கமாக இருக்க வேண்டும். ஆவிக்குரிய காரியத்தில் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
யோசேப்பு:
யோசேப்பு பழைய ஏற்பாட்டு சகாப்தத்தில் ஒரு சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்று தனது தந்தைக்கு விருப்பமான ஒரு மகன், அவனுடைய சகோதரர்கள் அவனை விற்று விட்டார்கள், யோசேப்பு எகிப்துக்கு கொண்டு போகப்பட்டு அங்கு பார்வோனுடைய பிரதாணியும், தலையாரிகளுக்கு அதிபதியாகிய போத்திபார் அவனை விலைக்கு வாங்கினான்.
கர்த்தர் அவனோடு இருந்தார். கர்த்தர் அவனோடு கூட இருக்கிறதையும் அவன் செய்கிற யாவையும் அவர் வாய்க்கப்பண்ணுகிறதையும் அவன் கண்டு அவனை அவன் வீட்டு விசாரனை காரணாக்கினான் (ஆதியாகமம் 39:2,3,4). யோசேப்பு அழகான வாலிபன். அவனுடைய எஜமானனின் மனைவி அவன் மேல் ஆசை கொள்கிறாள். யோசேப்பு தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி என்றான் (ஆதியாகமம் 39:9). கடைசியில் எகிப்து தேசம் அனைத்திற்கும் அதிபதியானான் (ஆதியாகமம் 41:43).
அர்ப்பணம், காத்திருப்பு தேவை :
வாலிப பருவத்தில் ஆண்டவருக்கு நம்மை அர்ப்பணம் செய்ய வேண்டும்.
ரூத்: புறதேசத்திலிருந்து யோகாவா தேவனை தன் வாழ்வில் ஏற்று கொண்டவள், அவளுடைய வாழ்க்கையில் துன்பம், துக்கம், வந்தது, உறவுகளை இழந்தாள். இவள் ஒரு அர்ப்பணத்தோடு தன்னுடைய மாமியாருடன் இருக்கிறாள். ரூத் மோவாபில் இருந்து பெத்லகேமுக்கு வந்தாள் அவளுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. தேவனோ அதை ஆச்சரியக் குறியாக்கினார். சாதாரண வேலை செய்ய வயல்வெளிக்கு சென்றாள் தேவன் அந்த வயல்வெளிக்கு எஜமானி ஆக்கினார்.
இனி ஒரு வாழ்க்கை கிடைக்குமா என்று நினைத்தவளுக்கு தேவன் ஒரு நல்ல புருஷனை கொடுத்தார். பெற்றோர் ஏழையாக இருக்கலாம், உடன்பிறப்புக்கள் கவனிக்காமல் இருக்கலாம், அழகு இல்லாமல் இருக்கலாம் இயேசு கிறிஸ்து மட்டுமே நமக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்க வல்லவராய் இருக்கிறார். தேவையானது ஒன்றே ஒன்று தான், எந்த சூழ்நிலையிலும் பாவத்தில் விழமாட்டேன், ஆண்டவரோடு இருப்பேன் என்று அர்ப்பணம் செய்தால் போதும் நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும். கர்த்தருக்கு காத்திரு, அவர் நல்ல வாழ்க்கைக் கொடுப்பார்.
அனேகர் விரும்பின பெண்ணையோ , ஆணையோ திருமணம் செய்திருக்கலாம், ஆனால் அவர்களுக்கு விரும்பின வாழ்க்கை கிடைத்ததா? கர்த்தருக்கே காத்திரு, நீ விரும்புகிற வாழ்க்கையை தர அவர் வல்லவராயிருக்கிறார், காலம் சென்றாலும் பரவாயில்லை கர்த்தருக்கு காத்திரு.
விடுதலையுள்ள வாழ்வு:
யார் நம்மை விடுதலை செய்ய முடியும். "ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்" (யோவான் 8:36), "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்" (யோவான் 8:32), "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு (2 கொரிந்தியர் 3:17), "இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்"(ரோமர் 6:22).
தரிசனமும், நோக்கமும் உள்ள வாழ்வு:
"நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை" (பிரசங்கி 12:1). எதிர்காலத்தை குறித்த அறிவு, தரிசனம் தேவை, எதிர்காலத்தை குறித்த விருப்பம் தேவை, கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் விருப்பங்களை உனக்குத் தருவார். உங்கள் வாழ்க்கையில் விருப்பத்தை அவர் தருவார், விருப்பத்தை தருகிறவர் அவரே. அநேகருக்கு தரிசனம் இல்லை, வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை, அனேக தடுமாற்றம் ஏனென்றால், தரிசனத்தை கொடுக்கிறவர், வாக்குதத்தத்தை கொடுக்கிறவர் யார் வாழ்க்கையில் இல்லையோ அவர்கள் வாழ்க்கை வெறுமையாக காணப்படும்.
வாலிப பருவத்தில் உன் சிருஷ்டிகரை நினை. படைத்தவர் தான், தன்னுடைய சிருஷ்டியாவர், அவரால் தான் நம் வாழ்வில் முழுமையான ஒரு செயலை செய்ய முடியும். இயேசு விருப்பத்தை கொடுப்பார், அதை நிறைவேற்ற வழியையையும் கொடுப்பார்.
ஆசீர்வாதமுள்ள வாழ்வு :
"அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார். ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்" (லூக்கா 1:28). தன்னுடைய வாழ்வில் தேவனுடைய திட்டத்தை அறிந்து அதற்காகவே வாழ்ந்தாள்.(அவமானம், நிந்தையை பற்றி கவலைப்படவில்லை). "நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது எனறாள்" (லூக்கா 1:38). எவ்வளவுப் பெரிய ஆழமான அர்ப்பணம்.
இயேசு கிறிஸ்து மரியாளுக்குள் இருந்து வெளிப்பட்டது போல நம் ஒவ்வொருக்குள்ளுமிருந்து கிறிஸ்து வெளிப்படுகிறார். இயேசுவை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள், அவருடைய இராஜ்ஜியம் நமக்குள் வரும் போது இராஜ்ஜியத்தினுடைய வல்லமையும், பிரசன்னமும் நமக்கு மகிழ்ச்சி, சமாதானம், நீதி, சுகம், சரியான ஆசை, சரியான திசை, மற்றும் வெற்றியுள்ள ஒரு வாழ்க்கையைத் தரும்.