Sermons

வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் பண்ணுவான்

இன்றைக்கு அநேக வாலிபர்கள் எதுவுமே செய்ய முடியாமல் எந்த நோக்கமும் இல்லாமல், சிறைப்பட்டுப் போன ஒரு வாழ்க்கையைப் போல அனைவருடைய வாழ்க்கையும் இருந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு விடுதலை வேண்டுமென்றால் ஒரே வழி இயேசு மட்டுமே. லூக்கா 7:14 இல் வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்த வாலிபனை ஆண்டவர் உயிரோடு எழுப்புகிற சம்பவத்தை இந்த வசனம் கூறுகிறது.

இன்றைக்கு வாலிபர்கள் தங்களை ஒவ்வொரு நாளும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். ஆனால், அநேக பேருக்கு தெரியவில்லை நாம் நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று, அதைத்தான் நாம் இன்றைக்கு தியானிக்கப் போகிறோம்.

ஒரு வாலிபன் தன்னை வசனத்தினால் காத்துக் கொள்ள வேண்டும். ஆவி, ஆத்துமா, சரீரம் மூன்றும் உடையவர்கள் தான் மனிதர்கள். நீங்கள் இந்த மூன்றையுமே வசனத்தின் மூலம் இன்றைக்கு காத்துக் கொள்ள அழைக்கப்படுகிறீர்கள்.

ஆவி:

“நான் உங்களுக்கு சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறது (யோவான் 6:63).

ஆத்துமா:

“அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்;” (எரேமியா 31:12), ஆத்துமா தோட்டத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது. “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; (சங்கீதம் 19:7).

சரீரம்:

“கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது” (லூக்கா 11:34-36) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம்(நீதிமொழிகள் 6:23) என்று வேதம் கூறுகிறது. வசனத்தின் மூலமும், வசனத்தை படிப்பதின் மூலமும் கண்கள் வழியாக சரீரத்துக்கு வெளிச்சம் உண்டாகிறது.

இன்று வாலிபருக்குள் எழும் கேள்வி இந்த பாவத்தை விட முடியவில்லை... ஏன்?

இருதயம் முழுமையாக வசனத்தால் நிறைந்திருக்குமானால் பாவம் செய்ய மாட்டோம் (சங்கீதம் 119:11). நாம் சாப்பிட்டு வயிறு நிறைய இருந்தால் மறுபடியும் நம்மால் சாப்பிட முடியாது. வயிறு காலியாக இருந்தால் யார் எதை கொடுத்தாலும் சாப்பிட தோணும். அதேபோல் இந்தப் பாவ எண்ணங்கள், இந்த சிந்தனைகள், ஆத்மாவிலே நமக்கு வருகிறது ஆத்மா காலியாக இருந்தால் இப்படிப்பட்ட சிந்தனைகள் மறுபடியும் வரும் ஆத்துமா எப்பொழுதும் முழுமையாக நிறைந்திருக்க வேண்டும். எதனால்? கர்த்தருடைய வார்த்தையினால்.  அப்பொழுது எல்லோரும் பாவத்தை மேற்கொள்ள முடியும். இன்றைக்கு நீங்கள் இப்படிப்பட்ட ஒரு காரியத்தில் முடியவில்லை என்று இருந்தால், நீங்கள் எந்த அளவுக்கு கர்த்தருடைய வார்த்தைகளை படித்து ஆத்துமாக்களில் வைக்கிறீர்களோ அந்த அளவுக்கு இதிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும் வேறு வழியே கிடையாது.  உங்கள் ஆத்மா பெருமையாக இருக்கக் கூடாது கர்த்தருடைய வார்த்தையினால் நிறைந்து இருக்க வேண்டும். அதினால்தான் வசனம் சொல்லுகிறது “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே (சங்கீதம் 119:9).

ஒரு வாலிபன் தன்னை எப்படி சுத்திகரித்துக் கொள்ள வேண்டும்?, வாலிபன் ஏன் வசனத்தால் காத்துக் கொள்ள வேண்டும்? (சங்கீதம் 119:118, சங்கீதம் 119:75).

மான் ஒன்று பெரிய கம்பிகளை தாண்டும்போது கம்பியில் மாட்டிக் கொண்டு அங்கே வயிறு கிழிக்கப்பட்டு மரித்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது. பாதுகாப்பிற்கான வேலியே அதனுடைய உயிரைப் பறித்தூவிட்டது. ஆன்மீக வாழ்க்கை என்பது மனம் போன போக்கில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிலையைவிட்டு தேவனுடைய பாதுகாப்பின் சமூகத்திற்குள் வருகிற ஒன்றாகும். ஆனால், அது ஒரு முள்வேலிக்குள் நம்மை உட்படுத்தும் வாழ்க்கையும் ஆகும்.  ஆனால், இந்த வேலிக்குள் பாதுகாப்பான சுதந்திரம் உண்டு, காட்டில் அலைந்து திரியும் ஆட்டிற்கு முள்வேலிகள் இல்லை. அது எங்கு வேண்டுமானாலும் விடுதலையோடு உலாவலாம். ஆனால் ஆபத்து எங்கே? எப்போ? எப்படி? வரும் என்று கூற முடியாது. 

முள்வேலி நாம் தவறான இடத்திற்குப் போகாமல் நம்மைத் தடுக்கின்றது. தவறானவைகளால் நாம் பாதிக்கப்படாமலும் அது நமக்கு உதவுகின்றது. ஆனால், இந்த முள்வேலியைத் தாண்டிச் செல்ல விரும்பும்போது, அதே முள்வேலியே நம்மை காயப்படுத்திவிடும். நாம் ஆண்டவரை அறியாமல் வாழும்போது பல தவறுகள் குற்றங்கள் செய்தாலும், அதனால் நாம் அதிகமாகப் பாதிக்கபடாமலும், குற்ற உணர்வு அடையாமலும் இருப்பதுண்டு. ஆனால், மனந்திரும்பி கர்த்தருக்குப் பிரியமாக வாழ முன்வந்த பின்னரோ. சிறு சிறு தவறுகளும் குறைவுகளும் நம்மைக் காயப்படுத்தும். தேவ கட்டளையை மீறும் போதெல்லாம் அது நமக்குள் பாவத்தின் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே தான், சிலர் பாவ வாழ்க்கையின் நாட்களைவிட பரிசுத்த வாழ்க்கையின் நாட்களிலே அதிக மன பாரமுடையவர்களாகவும், சுமை உடையவர்களாகவும் விளங்குகின்றனர். 

இந்த முள்வேலிகள் நம்முடைய நன்மைக்கே. இவைகள் நம்மைக் குத்தவில்லையெனில், நம்முடைய கால்கள் எல்லைகளைக் கடந்து போய்விடும். நம்முடைய இருதயம் கட்டுப்பாடுகளை இழந்து போய்விடும். ஆம், தேவன் அமைத்த முள் வேலிகளுக்காக நன்றி சொல்லுவோம். அதன் விளைவாக நாம் தவறுகளையும், குற்றங்களையும் தவிர்க்க, நல்ல வாய்ப்பைப் பெறுகின்றோம். 

ஈசாக்கு:

சிறு வயதிலேயே தன்னுடைய தந்தைக்கு கீழ்ப்படிந்த ஒரு வாலிபனாக இருந்ததை பார்க்க முடிகிறது (ஆதியாகமம் 22:8,9), நியாயப்பிரமாணத்திலும், கிருபையின் பிரமாணத்திலும் பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும். தாயையும், தகப்பனையும் கனம் பண்ண வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பே ஈசாக்கு தன்னுடைய வாழ்விலே இந்த பிரமாணங்களை கடைபிடிக்கிறதை நாம் இங்கே பார்க்க முடிகிறது. கர்த்தருடைய வார்த்தையை சிறுவயதிலிருந்தே அவர் கடைப்பிடிக்கிறதை பார்க்கிறோம்.

“ஈசாக்கு சாயங்கால வேளையிலே தியானம் பண்ண வெளியிலே போயிருந்து,” (ஆதியாகமம் 24:63). தியானம் என்பது கர்த்தருடைய வசனத்தை தியானிப்பது, அப்படியென்றால் ஈசாக்கு தன்னுடைய வாலிப வயதிலேயே மாலை வேலைகளிலே தியானம் பண்ணுகிற ஒரு இளைஞனாக இருந்திருக்கிறார். அதினால்தான் அவருடைய வாழ்க்கை வெற்றியுள்ள ஒரு வாழ்க்கையாக இருந்திருக்கிறது. மேலும் இது தேவனுடைய வழிகாட்டுதலைத் தேடும் ஒரு செயல். ஈசாக் வாழ்ந்த காலத்தில் நியாயப்பிரமாணம் கிடையாது, புதிய ஏற்பாடு எதுவும் கிடையாது. அவர் எதை தியானித்து இருப்பார். அவருக்கு அன்றைய வேதம், வாய்மொழியில் கர்த்தரால் கொடுக்கப்பட்ட வார்த்தையை, அவர் தந்தை ஆபிரகாம் மற்றும் தாய் சாராளிடமிருந்து ஆண்டவர் அவர்களை எப்படி நடத்திக் கொண்டு வந்தார், எப்படி பிரித்து எடுத்தார், என்னென்ன அற்புதங்கள், என்னென்ன வாக்குத்தத்தங்கள் கொடுத்திருக்கிறார் என்பதை அவர்கள் சொல்லி இருக்கக்கூடும், அவர்கள் சொன்ன அந்த வேத வார்த்தைகளை அவர் தியானித்து கர்த்தருக்கு பிரியமாக வாழ்ந்து இருக்கிறார். கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்கீதம் 1:2) என்று வேதம் சொல்கிறது.

வேதத்தின்படி பார்த்தால் ஈசாக்கு நன்றாக ஜெபிக்கிற ஒரு வாலிபராக இருந்திருக்கிறார். ஆதியாகமம் 25:21 இல் தன் மனைவிக்காக ஜெபித்ததை வேதம் கூறுகிறது கர்த்தர் அவருடைய விண்ணப்பத்தை கேட்டு பதில் கொடுத்ததையும் நாம் பார்க்கிறோம்.

கதை:

பெரியவர் ஒருவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டுவாசலில் அமர்ந்தபடி பைபிள் படித்துக்கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக்கொண்டே இருந்தான். ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான், தாத்தா! எப்பப் பார்த்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே, இதை எத்தனை நாட்களாக படிக்கிறீங்க?" என்றான். பெரியவர் சொன்னார், ஒரு ஐம்பது, ஐம்பத்தைந்து அம்பத்தஞ்சு வருடம் இருக்கும். அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறீங்க? என்றான்.

தாத்தா சிரித்தபடி கூறினார், எனக்கு ஒரு உதவி செய். நீ செய்து முடித்தப்பிறகு, நான் பதில் சொல்லுகிறேன். இளைஞன் கேட்டான், என்ன உதவி தாத்தா? பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார். அதில் அடுப்புக் கரி இருந்தது. அதை ஒரு மூலையில் கொட்டினார். பல நாட்களாக அடுப்புக்கரியை சுமந்து சுமந்து அந்தக் கூடையின் உட்புறம் கருப்பாக மாறி இருந்தது. பெரியவர் சொன்னார், தம்பி, அதோ இருக்குற குழாயில் இருந்து இந்தக் கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன், இளைஞனுக்கு சிரிப்பு வந்தது, இருந்தாலும் பெரியவர் சொல்லி விட்டதால் எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான். அவன் வந்து சேருவதற்கு முன்பே எல்லா நீரும் தரையில் ஒழுகிப்போனது. பெரியவர் சொன்னார், இன்னும் ஒரு முறை, இளைஞன் மீண்டும் முயன்றான். ஆனால் மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்? மீண்டும் சிந்திப் போனது. பெரியவர் கேட்டார், தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும்.

இளைஞன் ஒரு முடிவுக்கு வந்தான். இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுவோம். அவர் எந்தப் புத்தகத்தைப் படித்தால் எனக்கென்ன வந்தது?  தண்ணீர் பிடித்தான். வழக்கம் போலவே எல்லாத்தண்ணீரும் தரையில், தாத்தா, இந்தாங்க உங்க கூடை, இதில் தண்ணிர் நிற்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? எதற்கு என்னை இந்தப்பாடு படுத்தினீங்க?" என்றான். அவர் புன்னகையோடு சொன்னார், இதில் தண்ணிர் நிற்காதுன்னு எனக்கும் தெரியும். நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப் போகும் போது இதின் உட்புறம் எப்படி இருந்தது?" என்றார். இளைஞன் சொன்னான், ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது, இப்பொழுது பார் என்றார். தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது.

பெரியவர் சொன்னார், தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான். எத்தனை முறை தண்ணீர் பிடித்தாலும் மூங்கில் கூடை நிரம்பவே இல்லை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் கூடை சுத்தமாகிக்கிட்டே இருந்தது. அது போலத்தான் எத்தனை முறை படித்தாலும் முழு பைபிளும் மனப்பாடம் ஆகிடும்னு சொல்ல முடியாது. ஆனா, படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளத்திற்குள்ளே இருக்கும் அழுக்கும், கறையும் சுத்தமாகிக்கிட்டே இருக்கும் என்றார். இதைக்கேட்ட இளைஞனுக்குள்ளே ஒரு மாற்றம் வர ஆரம்பித்தது. உடனே, தாத்தா எனக்குள்ளேயும் நிறைய அழுக்கு இருக்கு, எனக்கும் இந்தப் பைபிள் கிடைக்குமா" என்றான்.  நிச்சயமாப்பா! என்றபடி தாத்தா வீட்டுக்குள்ளிருந்து ஒரு பைபிளை எடுத்து வர எழுந்தார்.

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே (சங்கீதம் 119:9, Ref எபேசியர் 5:26).

Loading...